நள்ளிரவில் தீயில் கருகியதாக நாடகம்; கோடாரியால் மகனை வெட்டி கொன்று எரித்த தாய் கைது: வீட்டை விற்று டிராவல்ஸ் தொடங்க பணம் கேட்டதால் வெறிச்செயல்


திருச்சி: வீட்டு வாசலில் தூங்கிய மகனை கோடாரியால் வெட்டி கொன்று, மண்எண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு தீயில் கருகியதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சென்னையில் மகள் படித்து வருகிறார். கோபிநாத் டிப்ளமோ படித்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா, அம்பாயி பாளையத்தில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பாலசுப்பிரமணியன் இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்தனர். இந்நிலையில் வேலம்பட்டி வயலில் உள்ள வீட்டு வாசலில் நேற்றுமுன்தினம் இரவு கோபிநாத் கட்டிலில் படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் தாய் செல்வி கழிவறைக்கு வெளியே வந்தபோது கட்டிலில் கோபிநாத் தீப்பற்றி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தா.பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கோபிநாத்தை கொலை செய்துவிட்டு தீயில் கருகி இறந்ததாக தாய் செல்வி நாடகமாடியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோபிநாத்திற்கு குடிபழக்கம் இருந்துள்ளது. விவசாயத்திற்காக டிராக்டர் ஒன்று கடனுக்கு வாங்கி உள்ளார். இந்நிலையில் வீட்டை விற்று பணத்தில் டிராவல்ஸ் தொடங்க வேண்டும் என அவரது தாயாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு போதையில் வந்த கோபிநாத், அவரது தாயாரிடம் தகராறு செய்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு வீட்டு வாசலில் படுத்து தூங்கியுள்ளார்.

நள்ளிரவு வரை விழித்திருந்த செல்வி, கோபிநாத் தூங்கியது தெரிந்ததும் கோடாரியால் அவரது தலையில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலையை மறைக்க செல்வி, மண்எண்ணெயை கோபிநாத் உடல் மீது ஊற்றி தீ வைத்தது தெரியவந்துள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிந்து செல்வியை கைது செய்தனர்.

The post நள்ளிரவில் தீயில் கருகியதாக நாடகம்; கோடாரியால் மகனை வெட்டி கொன்று எரித்த தாய் கைது: வீட்டை விற்று டிராவல்ஸ் தொடங்க பணம் கேட்டதால் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: