* கை கொடுத்த ஏஐ தொழில்நுட்ப புகைப்படம், 15 லட்சம் வாக்காளர்கள் பட்டியலை ஆராய்ந்து தட்டி தூக்கிய தனிப்படை
அரக்கோணம்: அரக்கோணத்தில் நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில், 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாஜி கடற்படை ஊழியரை தனிப்படை போலீசார் அசாமில் கைது செய்தனர். இதற்காக 15 லட்சம் வாக்காளர்கள் விவரம் திரட்டி, ஏஐ தொழில்நுட்பத்தில் புகைப்படம் வரைந்து அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டிஎஸ்பியாக ஜாபர் சித்திக் என்பவர் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டர்.
அவர், அரக்கோணம் போலீஸ் சப்-டிவிஷனில் உள்ள காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அரக்கோணம் டவுன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 1994ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர், இன்னும் கைது செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது. அந்த நபரை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதையடுத்து, குற்றவாளியை பிடிக்க எஸ்பி விவேகானந்த சுக்லா ஒப்புதலின்பேரில், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணசாமி, குமார், ஏட்டு சசிக்குமார், போலீஸ்காரர்கள் சரத், மாதவன் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து டிஎஸ்பி ஜாபர் சித்திக் உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
அதில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சவுத்ரி என்பவர், அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி ஜெயஸ்ரீ, தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சவுத்ரி, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் வேலை செய்யும் நண்பரான பாஸ்கர்ஜோதி கோகாய் என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, இருவரும் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயஸ்ரீயை எரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், பாஸ்கர்ஜோதி கோகாய் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். சவுத்ரி, ஜெயஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் செய்தார். அப்போது டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயஸ்ரீயை எரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இயைதடுத்து போலீசார், சவுத்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான பாஸ்கர்ஜோதி கோகாய்யை தேடிவந்தனர்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் பாஸ்கர்ஜோதி கோகாய் குறித்து பல்வேறு இடங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது பாஸ்கர்ஜோதி கோகாய், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து. தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்திற்கு சென்று அம்மாநில போலீசாருடன் இணைந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இருப்பினும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனால், அசாமில் போலீசார் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை திரட்டி விசாரணையை துவக்கினர். அதில், சுமார் 1,500 பேர் கோகாய் என இருந்தனர்.
இவர்களின், முகவரியை வைத்து விசாரித்தபோது கொலையாளி கோகாய்யின் பெயர் திப்ருக்கர் மாவட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.
ஆனால், பாஸ்கர்ஜோதி கோகாய் தற்போது எப்படி? இருப்பார் என தெரியவில்லை. இதனால், கொலைவழக்கு தொடர்பான ஆவணங்களில் இருந்த பாஸ்கர்ஜோதி கோகாய்யின் 21 வயது புகைப்படத்தை வைத்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாஸ்கர்ஜோதி கோகாய் தற்போது எப்படி? இருப்பார் என வரையப்பட்டது.
பின்னர் அந்த புகைப்படத்தை வைத்து திப்ருக்கர் மாவட்டத்தில் வீடு வீடாகவும், பல்வேறு இடங்களில் காட்டியும் பாஸ்கர்ஜோதி கோகாய்யை தேடினர். அதில், ஏஐ போட்டோவுடன் ஒத்துபோன ஒரு பாஸ்கர்ஜோதி கோகாய்யை பிடித்து விசாரித்தனர். அவர், தற்போது டியூசன் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவரிடம் துருவி, துருவி நடத்திய விசாரணையில் ஜெயஸ்ரீயை கொலை செய்த கோகாய் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை போலீசார், பாஸ்கர்ஜோதி கோகாய்யை நேற்று முன்தினம் கைது செய்து அசாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை, நேற்று அரக்கோணம் தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, பாஸ்கர்ஜோதி கோகாய்யை அரக்கோணம் காவல் நிலையத்தில் வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி 100நாட்கள் தொடர் விசாரணைக்கு பின் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக, அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் தனி படையினரை எஸ்பி விவேகானந்த சுக்லா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
The post அரக்கோணத்தில் 31 ஆண்டுகளாக முடியாத வழக்கை தோண்டி எடுத்த டிஎஸ்பி நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற மாஜி கடற்படை ஊழியர் அசாமில் கைது appeared first on Dinakaran.