கோடைகால வெப்ப அலையை எதிர்கொள்ள வழிமுறைகள்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வெப்ப அலையாக தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் சார்பிலும், வானிலை ஆய்வு மையத்தின் மூலமும் கோடை வெப்பம் குறித்து எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெப்ப தாக்கத்தை எதிர்கொள்ள குடிநீர் குடில்கள், ஓஆர்எஸ் திரவக் கரைசல் ஆகியன மக்கள் கூடும் பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன.

இப்பணி பொது சுகாதாரத்துறை மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேரடியாக வெயிலில் பணியாற்றுபவர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், தொழிலகங்கள், கட்டடத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், காவல் துறை, தீயணைப்புத்துறை, பேருந்துத்துறையில் பணியாற்றுபவர்கள் மிக மிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதில் முக்கியமாக தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வெப்பத் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நிர்வாகம் குடிநீர் குடில்கள், ஓஆர்எஸ் திரவக் கரைசல் அல்லது உப்பு சர்க்கரை கரைசல் (1 லிட்டர் நீரில் உப்பு – 1 தேக்கரண்டி, சர்க்கரை 6 தேக்கரண்டி) போன்ற நீரிழப்பை ஈடுசெய்யும் திரவக்கரைசல்களை தொழிலகங்களில் ஆங்காங்கே அமைக்க வேண்டும்.

இதுகுறித்து தொழிற்சாலை தகவல் பலகைகளில் வெப்ப அலைகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை அறிவிப்பாக வெளியிட வேண்டும். தொழிற்சாலைகளில் மருந்தகங்கள், டிஸ்பென்சரிகள் இருப்பின் அவ்விடங்களில் வெப்ப அலையை எதிர்கொள்ள போதிய அவசரகால மருந்துப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* நீர்சத்து நிறைந்த திரவ உணவு

உடலில் நீர்ச்சத்து குறையாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்தல், பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்லுதல், ஓஆர்எஸ், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடித்தல், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், வெளியே செல்லும் போது காலணிகள், தொப்பிகள் அணிதல், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடையை கொண்டு செல்லுதல் போன்ற வழிகாட்டல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எவரேனும் வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ உதவிக்கான 108 இலவச சேவை எண்ணை பயன்படுத்தி, மேல் சிகிச்சை மேற்கொள்ள அருகிலுள்ளவர்கள் உதவ வேண்டும்.

The post கோடைகால வெப்ப அலையை எதிர்கொள்ள வழிமுறைகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: