நேஷனல் ஹெரால்டு விவகாரம்; குற்றப்பத்திரிகையில் யாரை சேர்த்தாலும் காங். பயப்படாது: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு


புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி பெயரை அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், யார் பெயரை சேர்த்தாலும் காங்கிரஸ் பயப்படாது என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். டெல்லியில் நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்று பேசியதாவது: வக்பு சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் எழுப்பிய கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரச்னையில் பாஜ மற்றும் ஒன்றிய அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது.

குறிப்பாக, உரிய ஆவணங்கள் இன்றி வக்பு சொத்துக்களை பயன்படுத்தும் விவகாரத்தை சர்ச்சையாக்குவதற்காக ஒன்றிய அரசு வேண்டுமென்றே இப்பிரச்னையை கிளப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் யாருடைய பெயரைச் சொன்னாலும், நாங்கள் பயப்படப் போவதில்லை. இந்த நடவடிக்கைகள் பழிவாங்கும் மனப்பான்மையால் செய்யப்படுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜவினர் பொய் சொல்லி மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நாம் பொதுமக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ நாடு முழுவதும் அரசியலமைப்பை காப்பாற்ற பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பின்வரும் பேரணிகள் நடத்தப்பட உள்ளன.
* ஏப்ரல் 25 முதல் 30 வரை மாநிலங்களில் பேரணி
* மே 3 முதல் 10 வரை மாவட்ட அளவிலான பேரணி
* மே 11 முதல் 17 வரை சட்டப்பேரவை அளவில் பேரணி
* மே 20 முதல் 30 வரை வீடு வீடாகச் சென்று அரசியலமைப்பைக் காப்பாற்ற கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நேஷனல் ஹெரால்டு விவகாரம்; குற்றப்பத்திரிகையில் யாரை சேர்த்தாலும் காங். பயப்படாது: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: