சென்னை: ஜே.இ.இ. 2ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் 2 பெண்கள் உள்பட 24 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறுவது அவசியம். ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜன. 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது. இதனை சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11ம் தேதி வெளியானது.
இந்நிலையில், ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப். 1 முதல் 8ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன.2ம் கட்டத் தேர்வின் முடிவுகள் https://jeemai*.*ta.*ic.i*/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் 24 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் இடம்பெறவில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தரபிரதேசம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் மேற்குவங்கத்தை சேர்ந்த தேவ்துத்த மஜ்ஹி, ஆந்திராவை சேர்ந்த சாய் மனோக்னா குதிகொண்டா என்ற இரண்டு மாணவிகள் முதலிடம் பெற்று சாதித்துள்ளனர்.மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் 99.9 மதிப்பெண்களுடன் முதல் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
The post ஜேஇஇ 2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: 24 பேர் 100% மதிப்பெண் பெற்று சாதனை appeared first on Dinakaran.