போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு; சிவகிரி ஜமீனின் வாரிசுகளுக்கு அபராதம்: சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் சொந்தமான 45 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தங்களுடைய குடும்ப சொத்து எனக்கூறி சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் ராணி பாலகுமாரி நாச்சியார் உள்ளிட்ட 17 பேர் இணைந்து போலியான ஆவணங்களை தயார் செய்து, கடந்த 2006ம் ஆண்டு சுலைமான் கான் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கி, பின்னர் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நீஜீர் என்பவர் பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்தும் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி கேசன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிவகிரி ஜமீன் வாரிசுகள் மற்றும் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோதண்டராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை காலத்தில் ஒருவர் இறந்து விட்டதால் மற்ற 16 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.

எனவே, சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் 2 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.

The post போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப்பதிவு; சிவகிரி ஜமீனின் வாரிசுகளுக்கு அபராதம்: சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: