நியூயார்க்: கனடாவில் இந்திய மாணவி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்தததில் பரிதாபமாக பலியானார். கனடாவில் உள்ள ஆன்டரியோ மாகாணம், ஹாமில்டன் நகரில் மொஹ்வாக் கல்லூரியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் ரந்த்வா (22) என்ற மாணவி படித்து வந்தார். இந்நிலையில் இவர் புதனன்று இரவு சவுத் பெண்ட் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது திடீரென பாய்ந்து வந்த குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்தது. இதில் அலறித்துடித்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஹாமில்டன் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பேருந்து நிறுத்தம் அருகே கருப்பு நிற காரில் வந்த ஒருவர், வெள்ளை நிற காரில் இருந்தவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் தவறுதலாக துப்பாக்கி குண்டு மாணவி மீது பாய்ந்தது தெரியவந்தது. மேலும் ஒரு தோட்டா அருகில் இருந்த வீட்டின் ஜன்னலில் புகுந்து உள்ளே சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.
மாணவியின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை
பஞ்சாபின் டார்ன் டரன் மாவட்டத்தில் உள்ள கோயிண்ட்வால் சாஹிப்பில் உள்ள துண்டா கிராமத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் ரந்த்வா உயிரிழந்துள்ளது அவரது சொந்த கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாணவரின் தாத்தா சுக்விந்தர் சிங் கூறுகையில், ‘ஹர்சிம்ரத் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படிப்புக்காக கனடா சென்றார். அவர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தபோது குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாக எங்களது உறவினர்கள் தெரிவித்தனர். எனது பேத்தியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பஞ்சாப் அரசு மற்றும் ஒன்றிய அரசு உதவிய செய்ய வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கைகளை இரு அரசுகளும் விரைவுபடுத்த வேண்டும்’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post கனடாவில் இரு குழுவினர் மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பஞ்சாப் மாணவி பலி: பஸ்சுக்காக காத்திருந்தவருக்கு நடந்த சோகம் appeared first on Dinakaran.