* வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
*4 பேரிடம் தீவிர விசாரணை
நெல்லை: நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்று காவல்துறை விளக்கமளித்து உள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னத்துரை (20). இவர் கடந்த 2023ல் அங்குள்ள அரசு பள்ளியில் படித்த போது மற்றொரு சமுதாய மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதே பள்ளியை ேசர்ந்த மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க முயன்ற அவரது சகோதரிக்கும் வெட்டு விழுந்தது. இந்நிலையில் சின்னத்துரைக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கமான சிலர் நேற்று முன்தினம் சின்னத்துரையை மாவட்ட அறிவியல் மையம் அருகே வசந்தா நகருக்கு வரவழைத்து சரமாரியாக தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டனர்.
இதில் அவருக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட கையில் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். சின்னத்துரை நேற்று காலை அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பினார். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், சின்னத்துரையின் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக 4 பேரை பிடித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லும் போது பாதுகாப்பு அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீசார் விடுத்துள்ள அறிக்கை: சின்னத்துரை. நேற்று முன்தினம் மாலை நண்பரை பார்க்க செல்வதாக தாயிடம் கூறிவிட்டு பைக்கில் சென்றார். பின்னர் மாவட்ட அறிவியல் மையம் பகுதியில் மர்மநபர்கள் தாக்கியதாக தாயிடம் தகவல் தெரிவித்தார். இதையறிந்து போலீசார் அவரை மீட்டு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவமனையில் சின்னத்துரையிடம் விசாரித்த போது, தனது இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் வசந்தம் நகருக்கு சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் சின்னத்துரையிடம் பணம் கேட்டு மிரட்டி அவரை கம்பால் தாக்கியுள்ளனர். இதனால் வலது கையில் காயம் ஏற்பட்டது. மேலும் அவரது செல்போனை அவர்கள் பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த இன்ஸ்டாகிராம் பயனர் பெயர், கடவுச்சொல்லை கேட்டபோது மறந்து விட்டதாக சின்னத்துரை தெரிவித்தார். மேலும் மின்னஞ்சல் முகவரியும் அதன் கடவுச் சொல்லுமே மறந்து விட்டதாக தெரிவித்தார். அவற்றை ரெகவரி செய்து மீட்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாங்குநேரியில் கடந்த 2023ம் ஆண்டு மாணவர் சின்னத்துரையை தாக்கிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் நெல்லை மாநகரத்திலுள்ள சாதி ரீதியாக கொலை முயற்சி, கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாணவன் சின்னத்துரை மீது தாக்குதல் ஏன்? காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.