சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று மாலை ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக புதுடெல்லி புறப்பட்டு செல்கிறார். அவருடன் ஆளுநரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் செல்கின்றனர். புதுடெல்லிக்கு 4 நாள் பயணமாக செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து வரும் 20ம் தேதி மதியம் 12.45 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக சென்னைக்கு திரும்புகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் 4 நாள் திடீர் பயணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், அவர் மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் புதுடெல்லி செல்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல், நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்தது பற்றி கடந்த வாரம் உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்து, ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தது. இது, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறவேண்டும். இல்லையேல், அவராகவே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வாரத்திலேயே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் செல்லவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். அப்போது அவரை தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு அவசரமாக டெல்லிக்கு அழைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று மாலை ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக புதுடெல்லி புறப்பட்டு செல்கிறார்.
The post ஒன்றிய அரசு அவசர அழைப்பு? தமிழ்நாடு ஆளுநர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.