பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. 104 மையங்களில் 29,899 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வுகளை தொடர்ந்து நேற்று இறுதியாக சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: சமூக அறிவியல் வினாத்தாளில் மொத்தம் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள், அதில் 12 கேள்விகள் நேரடியாகவும், இரு கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்தும் கேட்கப்பட்டிருந்தன.

அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த 10 வினாக்களில் ஒரு கேள்வி மட்டும் (கட்டாய வினா) சற்று சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. 5 மதிப்பெண் பகுதியிலும் 10 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அதில் வரைபடம் (கட்டாய வினா), காலக்கோடு உள்ளிட்ட அனைத்து வினாக்களும் ஓரளவுக்கு எளிதாகவே இருந்தன. அதைப்போன்று 8 மதிப்பெண் (நெடுவினா) பகுதியில் இரு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியிலும் வரைபட வினா இடம் பெற்றிருந்தாலும் அதற்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது சமூக அறிவியல் தேர்வு ஓரளவுக்கு எளிதாகவே இருந்தது. மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் எளிதாக இருந்ததால் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று மாணவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு சராசரி மாணவர்களும் உற்சாகத்துடன் தேர்வெழுதும் வகையில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் சற்று பதற்றத்துடன் எதிர்பார்த்த அறிவியல் தேர்வும் எளிதாக இருந்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அறிவியல் பாடம் மற்றும் பத்தாம் வகுப்பில் ஒட்டுமொத்த தேர்ச்சி ஆகியவை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் கூறினர்.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: