அரியானா நில பேரம் வழக்கு; ஈடி அலுவலகத்திற்கு நடந்தே சென்று ஆஜரான ராபர்ட் வதேரா: பலமுறை சம்மன் விடுத்து விசாரிப்பது அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரியானா நில பேரம் தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மனைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா நேற்று நேரில் ஆஜரானார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், கடந்த 2008ம் ஆண்டு குருகிராமில் உள்ள ஷிகோபூரில் 7.5 ஏக்கர் நிலத்தை ஓங்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. பின்னர், இதே நிலத்தை ரூ.58 கோடிக்கு மற்றொரு நிறுவனத்திற்கு விற்க வதேரா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த இவ்விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2018ல் அரியானா போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சம்மனைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா நேற்று நேரில் ஆஜாரானார். டெல்லி சுஜன் சிங் பார்க்கில் உள்ள தனது வீட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் ஏபிஜே அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வதேரா நடந்தே சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தவிர வேறொன்றுமில்லை. சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசும் போதெல்லாம் என்னை தடுக்கவும், நசுக்கவும் முயற்சி செய்கிறார்கள். இதே போல நாடாளுமன்றத்திலும் ராகுல் காந்தியின் குரலை தடுக்க முயன்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே பல முறை வாக்குமூலமும் பல்லாயிரக்கணக்கான பக்க ஆவணங்களையும் சமர்பித்த பிறகும் தொடர்ந்து என்னை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர்.

விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். விசாரணையை அமலாக்கத்துறை முடிக்க வேண்டும். ஆனால் 2007ல் நடந்த விஷயத்தை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது ஏன்?’’ என்றார். காலை 11 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் சென்ற வதேராவிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்றும் அவர் ஆஜராக சம்மன் தரப்பட்டுள்ளது.

The post அரியானா நில பேரம் வழக்கு; ஈடி அலுவலகத்திற்கு நடந்தே சென்று ஆஜரான ராபர்ட் வதேரா: பலமுறை சம்மன் விடுத்து விசாரிப்பது அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: