டெல்லி: வக்பு திருத்தச் சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி அளித்துள்ளார். வக்பு திருத்தச் சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே வக்பு திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அண்மையில் உறுதியளித்தாா்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள சட்ட அமைச்சக அலுவலகத்தில் அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் படத்துக்கு மரியாதை செலுத்திய ஒன்றிய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், பின்னா் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; வக்பு திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் இந்தியா முழுவதற்கும் அமலாவதாகும். அப்படி ஏதாவது ஒரு மாநிலத்தில் சட்டம் அமலாவதில் சிக்கல் எழுந்தால், அதன் பிறகு உரிய விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோதும் மம்தா இதேபோன்றுதான் பேசினாா். ஆனால், அந்த சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்பட்டது. ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுவிட்டால் அது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறினார்.
The post வக்பு திருத்தச் சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்: ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி appeared first on Dinakaran.