தற்போதைய அதிபர் டிரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார். புதிய திருத்த சட்டம் கடந்த 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும் உடனடியாக தங்கள் விவரங்களை உள்துறை பாதுகாப்பு (டிஎச்எஸ்) அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்படுவர். சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அமெரிக்கா வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும். ஏப்ரல் 11 ஆம் தேதி வரை ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் தங்களை கூட்டாட்சி ஆளுநரிடம் பதிவு செய்ய வேண்டும். ஏப்ரல் 11 அன்று அல்லது அதற்குப் பிறகு அமெரிக்காவிற்கு வந்தவர்கள், வருகைத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவில் தங்கினால், அவர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். 2025ல் 14 வயதை எட்டுபவர்கள், அதிகாரிகளிடம் மீண்டும் பதிவு செய்து, அவர்களின் 14வது பிறந்த நாளின் 30 நாட்களுக்குள் அவர்களின் கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று வாழும் வெளிநாட்டினர் மீதான கெடுபிடிகளும் அதிகரித்து உள்ளன. மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது அந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து அமல்படுத்தி உள்ளனர். இதன்படி எச்-1பி விசா, மாணவர் விசா வைத்திருப்போர் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்போர் 24 மணி நேரமும் தங்களது ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் அவர்களின் பிள்ளைகள் 14 வயதை எட்டிய உடன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பெற்றோரே பொறுப்பு என்றும் அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்யவில்லை என்றால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.4.30 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும். 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளால் இந்திய சமூகத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
* பாஸ்போர்ட், விசா
எப்போதும் வைத்திருக்க வேண்டும்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: அமெரிக்கா விசா வழங்கப்பட்டவுடன் அமெரிக்க அரசின் கடுமையான பாதுகாப்பு சோதனை முடிவடையாது. பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் அல்லது ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்க விசாக்களுக்கு தகுதியற்றவர்கள்.
மேலும் அமெரிக்கா விசா வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் இருக்க அனுமதிக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். புதிய விசா விதிமுறைகள் ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிகளின்படி, அமெரிக்காவின் எல்லைக்குள் இருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களும், பாஸ்போர்ட், விசா அனுமதி மற்றும் கிரீன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாதவர்கள் எல்லா நேரங்களிலும் இந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post உடனடியாக சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா 30 நாள் கெடு: இல்லாவிட்டால் வெளியேற்றம்: அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி appeared first on Dinakaran.