கீழக்கரை கடலோரம் குப்பையுடன் ஒதுங்கிய ரூ.6 கோடி கொக்கைன் விற்க முயன்ற வனக்காப்பாளர் உள்பட 8 பேர் கைது: சென்னையில் அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு அதிரடி

சென்னை: கீழக்கரை கடலோர பகுதியில் குப்பையுடன் கரை ஒதுங்கிய ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைனை விற்க சென்னைக்கு வந்த சாயல்குடி சரக வனக்காப்பாளர் மகேந்திரன் உள்பட 8 பேரை அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியில் இருந்து சிலர் உயர் ரக கொக்கைன் விற்பனை செய்ய சென்னைக்கு வந்து இருப்பதாக அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை பரங்கிமலை பகுதியில் அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று வந்தது. அந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை நடத்திய போது, தடை செய்யப்பட்ட ஒரு கிலோ மதிப்புள்ள கொக்கைன் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வனக்காப்பாளராக பணியாற்றி வரும் மகேந்திரன் உள்பட 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கொக்கைன், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்று, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட வனக்காப்பாளர் மகேந்திரனிடம் விசாரணை நடத்திய போது, அவரது உறவினரான பாண்டி என்பவர் கீழக்கரை கடலோர பகுதியில் பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கும்போது கொக்கைன் என்ற போதை பொருள் கிடைத்ததும் அதை சென்னையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. மேலும், அதேபோல் கடற்கரையோரம் கொக்கைன் எடுத்த கீழக்கரையை சேர்ந்த மற்றொரு கும்பல் ஏற்கனவே சென்னைக்கு வந்து போதை பொருள் கும்பலுக்கு கொக்கைன் விலை பேசி விற்பனை செய்ய வந்திருப்பது குறித்து தகவல் அளித்தனர்.

அந்த தகவலின்படி அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு போலீசார், கோயம்பேடு பகுதியில் சென்னை மாநகர போலீசார் உதவியுடன் முக்கிய குற்றவாளியான காசிம் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கொக்கைன் மற்றும் ஒரு சொகுசு கார், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொக்கைன் கடத்தி விற்பனை செய்ய முயன்ற வழக்கில் சாயல்குடி சரக வனக்காப்பாளர் மகேந்திரன், அவரது உறவினர் பாண்டி, கீழக்கரை பகுதியை சேர்ந்த பழனீஸ்வரன், காசிம், முகமது முபாரக், எட்வர்ட் சாம், முகமது இட்ரிஸ், காஜா மொகிதீன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை பொருள் யாருக்கு விற்பனை செய்ய வந்தனர். அவர்கள் பின்னணி குறித்து அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கீழக்கரை கடலோரம் குப்பையுடன் ஒதுங்கிய ரூ.6 கோடி கொக்கைன் விற்க முயன்ற வனக்காப்பாளர் உள்பட 8 பேர் கைது: சென்னையில் அமலாக்கம் மற்றும் சிஐடி பிரிவு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: