அகமதாபாத்: ராகுல்காந்தி இன்று முதல் 2 நாள் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது புதிய மாவட்ட தலைவர்கள் தேர்தலை தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் அகமதாபாத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து ராகுல்காந்தி இன்று முதல் 2 நாள் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஏனெனில் குஜராத் காங்கிரஸ் முற்றிலும் கலைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப். 12ம் தேதி 33 மாவட்டங்கள், 8 முக்கிய நகரங்களுக்கும் தனித்தனி பார்வையாளர்கள் மற்றும் 183 தொகுதி பார்வையாளர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அங்கு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் ராகுல்காந்தி, மாநில அளவிலான பயிற்சியை தொடங்கி வைத்து புதிய மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு முறை பற்றி அறிவிக்கிறார். புதன்கிழமை, அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றுவார். புதிய செயல்முறையின் மூலம் மாவட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னோடித் திட்டத்தை அவர் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி ஒரு அகில இந்திய பார்வையாளர் மற்றும் 4 மாநில பார்வையாளர்களை உள்ளடக்கிய ஐந்து பேர் கொண்ட குழு, 41 மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்கும். இந்த முழு செயல்முறையும் அடுத்த 45 நாட்களில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வாகிறார்கள் குஜராத் காங்கிரஸ் கூண்டோடு மாற்றம்: ராகுல்காந்தி இன்று முதல் 2 நாள் ஆலோசனை appeared first on Dinakaran.