இச்சூழலில் அடுத்த ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இப்போதே கூட்டணி சேர்ந்துவிட்டோம் என அதிமுக-பாஜ அறிவித்துள்ளது. அதுவும் சென்னைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திப்போம் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதிமுக-பாஜ கூட்டணி அமைந்த பின், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அவர் சென்ற அரைமணி நேரத்தில் சுமார் 11 மணி அளவில், நம்பர் பிளேட் இல்லாத காரில், முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்தார்.
அவர் உள்ளே சென்று, எடப்பாடியுடன் நீண்ட நேரம் பேசினார். இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. மதியம் 1.15 மணிக்கு பின் வெளியே வந்த விஜயபாஸ்கரிடம், இந்த திடீர் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘தமிழ் புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவிக்க வந்தேன், இது வழக்கமான சந்திப்பு தான்,’ என கூறிவிட்டு அங்கிருந்து அதே நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்றார்.
அதிமுக-பாஜ கூட்டணி அமைய காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர்களில், புதுக்கோட்டை விஜயபாஸ்கரும் ஒருவர்.
அவர், தனியாக சேலம் வந்து, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிச்சென்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அப்போது முதல் ஆளாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் தான், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில், அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும், அதனடிப்படையில் சோதனையிடுவதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது பாஜவுடன் கூட்டணி அமைந்து விட்ட நிலையில், அவ்வழக்கில் இருந்து வெளியே வருவது தொடர்பாக பேசியிருக்கலாம் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் வழக்கமாக தனது காரில், எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வரும் விஜயபாஸ்கர், ஏன் இருபுறமும் நம்பர் பிளேட் கழற்றப்பட்ட காரில் வந்து சந்தித்து சென்றுள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
The post சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து எடப்பாடியை சந்தித்த விஜயபாஸ்கர்: 2 மணி நேரம் பேசியது என்ன? appeared first on Dinakaran.