அதிமுகவை மிரட்டி பாஜ பணிய வைத்திருக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

கோவை: கூட்டணி விஷயத்தில் அதிமுகவை மிரட்டி பாஜ பணிய வைத்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 75வது ஆண்டு விழாவையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் கற்போம் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மற்றும் மாணவர் பாராளுமன்றம் ஆகியவை நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக நேற்று கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வக்பு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி இஸ்லாமிய சமூகத்தை ஒன்றிய அரசு அச்சுறுத்தி இருக்கின்றது. இஸ்லாமிய வக்பு சொத்துகளை நிர்வகிக்க, இஸ்லாமியர் அல்லாதவர்களை ஒன்றிய அரசு நியமிக்க இருப்பது அடாவடி அரசியல். இது நவீன பாசிசம். இந்த பாசிச தாக்குதலை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பூர்வமான கடமைகளில் இருந்து விலகி, அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார் என்பதை சுட்டிகாட்டி, இதற்கு எதிராக வரலாற்று பூர்வமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் சட்டப்பூர்வமாக வெற்றி பெற்று இருக்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஆனால், அவர் பதவி விலக முன்வர மாட்டார் என்பதால், குடியரசு தலைவர் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பாஜ பணிய வைத்து இருக்கிறது. கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா அறிவிக்கிறார். யார் தலைமையில் கூட்டணி என்ற சந்தேகம் எழுகின்றது. கூட்டணி ஆட்சி அமைக்க போகின்றோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை. இதில், அதிமுகவின் ரோல் என்ன? அதிமுக தொண்டர்கள் இதை மனப்பூர்வமாக ஏற்கவில்லை என நினைக்கிறேன். இந்த கூட்டணியால் திமுக கூட்டணிக்கு எதிராக எந்த தாக்கமும் ஏற்படாது. பாஜ அல்லாத கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சித்தார். ஆனால், அது முடியவில்லை. அதிமுகவிற்கு ஏதோ நெருக்கடியை பாஜ கொடுத்து இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவை மிரட்டி பாஜ பணிய வைத்திருக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: