சமையல் காஸ் விலை உயர்வு அப்போ ரூ.410 இப்போ ரூ.1120: இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: எரிபொருள் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. மேலும் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. உஜ்வாலா பயனாளிகளுக்கான மானிய விலை ரூ.503ல் இருந்து ரூ.553 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர் ரூ. 853ஆக உயர்ந்துள்ளது. இதை கண்டித்து டெல்லியில் ரைசினா சாலையில் காங்கிரஸ் அலுவலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப், ‘ ஒன்றிய அரசு தனது பொருளாதார தவறான நிர்வாகத்தை மறைப்பதற்காக சாமானிய மக்கள் மீது சுமையை சுமத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சிக்கிறது. ஒருபுறம் பிரதமர் மோடியின் நண்பர் டிரம்ப் நம் மீது வரிகளை சுமத்துகிறார். அதனை ஈடுசெய்வதற்கு பாஜ அத்தியாவசிய பொருட்களின் விலைலை உயர்த்தி வருகின்றது’ என்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது ரூ.410 ஆக இருந்தது. மோடி ஆட்சியில் சிலிண்டரின் விலை ரூ.1120ஐ கடந்துவிட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

The post சமையல் காஸ் விலை உயர்வு அப்போ ரூ.410 இப்போ ரூ.1120: இளைஞர் காங்கிரஸ் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: