புதுக்கோட்டை, ஏப்.12: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அறந்தாங்கி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நேற்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். பின்னர், அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் 68,150 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் முழுவதும் கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையிலான 9 வட்டங்கள், கோட்டப் பொறியாளர்கள் தலைமையில் 45 கோட்டங்கள் மூலம் பணிகள் மேற்கொண்டும், பராமரித்தும் வரப்படுகிறது. அதில், நிர்வாக வசதிக்கா, நெடுஞ்சாலைத் துறை செயல்பாட்டை மேம்படுத்தவும் தமிழக அரசு மேலும் 1 வட்டம் மற்றும் 4 கோட்டங்களை உருவாக்கியுள்ளது.
மேலும், 2,800 கி.மீ. நீளமுள்ள சாலைகளை பராமரித்து வந்த நம் புதுக்கோட்டை கோட்டத்தை பிரித்து பராமரிப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிதாக கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ஒரு தரக்கட்டுப்பாட்டு உட்கோட்டம் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அறந்தாங்கி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது என்றார். பின்னர், அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அறந்தாங்கி கோட்டத்தில் திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் ஆகிய உட்கோட்டங்களில் 1463 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அடங்கி உள்ளன. மேலும், புதுக்கோட்டை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை மேற்கு, கீரனூர், விராலிமலை ஆகிய உட்கோட்டங்களில் உள்ள 1340.60 கி.மீ. சாலைகள் அடங்கி உள்ளன.
இதில், புதுக்கோட்டை மேற்கு மற்றும் விராலிமலை உட்கோட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டவை. இதன்மூலம், நெடுஞ்சாலைத்துறை பணிகளை உயர் அலுவலர்களால் அருகிலிருந்து கண்காணிக்க முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்.ராஜராஜன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர்.சிவக்குமார், கண்காணிப்பு பொறியாளர் (திருச்சி) ரமேஷ், கோட்டப் பொறியாளர்கள்மாதேஸ்வரன் (அறந்தாங்கி), தமிழழகன் (புதுக்கோட்டை), உதவிப் பொறியாளர் தியாகராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post அறந்தாங்கி நெடுஞ்சாலைத்துறைக்கு கோட்ட புதிய அலுவலகம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.
