சூலூர், ஏப். 12: கோவை மாவட்டத்தில் டீசல், ஜேசிபி உதிரி பாகங்கள் மற்றும் புதிய வாகனங்களின் விலை உயர்வு, வாகன காப்பீடு, சாலை வரி அதிகரிப்பு ஆகியவற்றால் ஜேசிபி வாகனங்களை லாபகரமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும், வாடகை உயர்த்ததுவதை வெளிப்படுத்தும் வகையிலும், ஏப்ரல் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் அன்னூர், கோவில்பாளையம், சரவணம்பட்டி, சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் ஜேசிபி, பொக்லைன், ஹிட்டாச்சி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் வாகனங்கள் ஏப்ரல் 10ம் தேதி முதல் முழுமையாக முடங்கின. இந்த வேலை நிறுத்தத்தால் கட்டுமான பணிகள், சாலை பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், “விலை உயர்வால் எங்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை. எங்கள் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 5 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.” என்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
The post ஜேசிபி உரிமையாளர்கள் 5 நாள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.