மாநகராட்சி சார்பில் 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா

கோவை, ஜன. 8: கோவை மாநகராட்சி சார்பில் வரும் 14ம் தேதி ஐந்து இடங்களில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டி நடக்கிறது. கோவை மாநகராட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதான வளாகம், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காந்தி மாநகர் மாநகராட்சி விளையாட்டு மைதான வளாகம், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவைப்புதூர் ‘ஏ’ கிரவுண்டு மைதானம் மற்றும் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வ.உ.சி. மைதானம் ஆகிய 5 இடங்களில் வருகிற 14ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

இந்த சமத்துவ பொங்கல் விழாவில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் இடுதல், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை கொண்டாடும் வகையிலான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறி அடித்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி, கயிறு இழுத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடக்கிறது.

இவ்விழாவில், மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், குடியிருப்பு நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

 

Related Stories: