கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி பதவியிடங்களுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 31.03.2025 வரை ஏற்பட்ட காலி பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் காலி பதவியிடங்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்புகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் விவரம், வாக்குச்சாவடி மையங்கள் விவரம், காலி பணியிடங்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த கருத்துகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர் கருத்துகளுக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் கருத்துக்கேட்பு appeared first on Dinakaran.