ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாலையூர், சி.கீரனூர், மருங்கூர், கீழ் புளியங்குடி, மேல் புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலப்பாலையூர் ஊராட்சியில் ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், நர்சரி கார்டன் மற்றும் சி.கீரனூர் ஊராட்சியில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளை அளவீடு செய்து பார்வையிட்டார். பின்னர் பயனாளிகளிடம் குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து 15வது நிதி குழு 2024-25ம் ஆண்டு ரூ.41 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் துணை சுகாதார வளாகம் மற்றும் மருங்கூர் ஊராட்சியில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கீழ் புளியங்குடியில் அரசு தொடக்க பள்ளி சுற்றுச்சுவர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.6 லட்சத்து 13,000 மதிப்பிலான பணிகளையும், நர்சரி கார்டன் போன்றவற்றை பார்வையிட்டார். இதைதொடர்ந்து மேல் புளியங்குடி ஊராட்சியில் 2024-25ம் ஆண்டு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் பணி மற்றும் விளையாட்டு திடலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் செல்வம், ஸ்ரீ முஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் வேல்முருகன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன், வட்டாட்சியர் இளஞ்சூரியன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் அனுசுயா தேவி, ஜெயச்சந்திரன், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
The post ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.