திருமலை: மாற்று சமூக வாலிபரை காதலித்து கர்ப்பமான மைனர் பெண் மர்மமாக இறந்தார். அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் காலனியைச் சேர்ந்தவர் அஜய்(22). இவரும் நரசிங்காபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்துள்ளனர். சிறுமி பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலை சிறுமியின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அருகே உள்ள பகுதியில் திருமணம் செய்துகொண்டு வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே சிறுமி 6 மாத கர்ப்பமானார். இதையறிந்த அவரது பெற்றோர் மகள் இருக்கும் இடம் தெரிந்துகொண்டு அங்கு சென்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர்.
பின்னர் கருவை கலைக்க வைத்தனர். இதையடுத்து மகளை கடத்தியதாக அஜய் மீது போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், சிறுமியை அஜய் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அஜய் சிறையில் இருந்த 4 மாதத்தில் சிறுமி, தனது பெற்றோருக்கு தெரியாமல் சிறைக்கு சென்று பலமுறை சந்தித்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தந்தை கிஷோர், தாய் சுஜாதா இருவரும் மகளை கண்டித்துள்ளனர். இதற்கிடையில் அஜய் ஜாமீனில் வெளியே வந்தார். சில தினங்களுக்கு முன் தன்னை வீட்டில் அடித்து துன்புறுத்துவதாக அஜய்யின் செல்போனுக்கு அந்த சிறுமி மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த 4ம்தேதி வீட்டில் சிறுமி இறந்ததாகவும் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அவரது பெற்றோர் எரித்து இறுதிச்சடங்கு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த கிராம மக்கள் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மிட்டபாளம் பகுதிக்கு வந்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அஜய் போலீசில் கொடுத்துள்ள புகாரில் எனது காதலியின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. அவளை வீட்டில் கொல்ல முயற்சிப்பதாக எனக்கு மெசேஜ் அனுப்பினாள். அவளை அவரது பெற்றோர் அடிக்கடி சரமாரி தாக்கியுள்ளனர். எனவே, ஆணவக் கொலை செய்திருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். அஜய்க்கு சிறுமி அனுப்பிய மெசேஜ், கிராம மக்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில், இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாற்று சமூக வாலிபரை காதலித்து கர்ப்பமான மைனர் பெண் மர்மசாவு?.. ஆணவக் கொலை? appeared first on Dinakaran.