திருவேற்காடு தனியார் விடுதியில் தேமுதிக பிரமுகரின் அழுகிய சடலம் மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை

பூந்தமல்லி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ள சன்னதி தெருவில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு தனியார் தங்கும் விடுதியில், அதே பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் ஏழுமலை (50) என்பவர் கடந்த சில நாட்களாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை விடுதி அறையில் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விடுதி அறைக்குள் அழுகிய நிலையில் கிடந்த தேமுதிக பிரமுகர் ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றினர்.

அச்சடலத்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன தேமுதிக பிரமுகர் ஏழுமலை தையல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பிறந்ததாகவும், இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை பிரிந்து தேமுதிக பிரமுகர் ஏழுமலை திருவேற்காட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவேற்காடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது அவரை மர்ம நபர்கள் யாரேனும் முன்விரோத தகராறு காரணமாக அடித்து கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post திருவேற்காடு தனியார் விடுதியில் தேமுதிக பிரமுகரின் அழுகிய சடலம் மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: