தங்கம் விலை புதிய உச்சம் ஒரு பவுன் ரூ.1,02,560

சென்னை: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1,02,560 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் ஜொலித்தாலும், அதன் விலை உயர்வு நகைப்பிரியர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்து வருகிறது. நேற்று வியாழக்கிழமை காலை நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.160 உயர்ந்து விலை ரூ. 1,02,560 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்தில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 20 அதிகரித்து, நேற்று ரூ. 12,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் நேற்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ. 245 க்கு விற்பனையாகிறது. மொத்த விற்பனையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 1,000 உயர்ந்து, இதுவரை இல்லாத அளவாக ரூ.2,45,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ‘‘தங்கம் வாங்குவது என்பது இப்போது வெறும் ஆசை மட்டுமல்ல, அது ஒரு சவாலாகவே மாறிவிட்டது” என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருமண விசேஷங்கள் மற்றும் பண்டிகை காலம் என்பதால், இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஏறிக்கொண்டே போகும் இந்த விலை உயர்வு எப்போது குறையும் என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: