கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். பின்னர் திமுக ஆட்சி 2021 மே மாதம் ஏற்பட்ட பிறகும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.
எனினும் புரோகித் பல்வேறு பிரச்னைகளில் சிக்கினார். இதனால் அவரை ஒன்றிய அரசு அதிரடியாக பஞ்சாப்புக்கு மாற்றியது. இதைத்தொடர்ந்து மணிப்பூரில் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவியை 2021 செப்டம்பர் 9ம் தேதி தமிழ்நாட்டின் கவர்னராக ஒன்றிய அரசு நியமித்தது. வழக்கமாக ஒரு கவர்னரின் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகள். அதன்பின்னரும் ஒன்றிய அரசு நினைத்தால் அவரது பதவியை நீட்டிப்பு செய்யலாம் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்றலாம். மேலும் ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டு, அவரது பதவிக்காலம் முடியும் முன்னரே புதிய கவர்னர் நியமிக்கப்பட்டால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட கவர்னரின் காலத்தை புதிய கவர்னர் நியமன காலத்துடன் சேர்க்க முடியாது.
அதன்படி பார்த்தால் தமிழக கவர்னரின் பதவிக்காலம் 2027ம் ஆண்டுவரை உண்டு. ஆனால், தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து அவர் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக மொழி, இனம், மதம் தொடர்பாக பல்வேறு தவறான கருத்துகளை துடுக்காக பேசி தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளார். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தையும் நினைத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் பேசலாம். மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்துப் பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக இவரை விமர்சிக்கின்றனர்.
பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அத்தோடு தமிழக அரசுடன் ஆரம்பம் முதலே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக சட்டப்பேரவையில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளிநடப்பு செய்தார். இதுவும் தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. அதோடு தமிழ் மொழியை குறைவாக மதிப்பிட்டு மற்ற மொழிகளோடு இணைத்து பேசி வருவதையும் மக்கள் விரும்பவில்லை.
இவ்வாறு கவர்னர் ரவிக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு அனுப்பி வைக்கும் எந்த மசோதாவுக்கும் அனுமதி அளிக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களையும் கிடப்பில் போட்டு வந்தார். அதேபோல் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்களை விடுவிப்பதிலும் அவர் காலதாமதம் காட்டியதால் உச்சநீதிமன்றத்தில் கடும் கண்டனத்துக்கு ஆளானார்.
அதேபோல, பல்கலைக்கழக மசோதாக்கள், துணைவேந்தர் நியமன பிரச்னை, வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை மாற்றி விட்டு முதல்வரை வேந்தராக நியமிப்பது போன்ற மசோதாக்களை கிடப்பில் போட்டு வந்தார். சில மசோதாக்களை திருப்பி அனுப்பினார். சில மசோதாக்களை காலதாமதம் செய்ததோடு, ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தார். இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு அவர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கவர்னருக்கு, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க எந்த அதிகாரமும் இல்லை.
அவரது செயல் சட்டவிரோதம் என்று கண்டித்ததோடு, அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பை வழங்கியது. மேலும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னருக்குப் பதில், முதல்வரே இனிமேல் இருப்பார் என்பதும் தீர்ப்பு உறுதிபடுத்தியது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்குப் பொருந்தும் என பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் இஷ்டம்போல செயல்பட்டு வந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது.
ஆளுநர்கள் தேவையில்லாமல் ஒன்றிய அரசையும் சர்ச்சைக்குள் இழுத்து விட்டுள்ளதால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லாம் இனிமேல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடும் சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த ஒன்றிய அரசு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்றிவிட்டு புதிய ஆளுநரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தீவிர ஆலோசனையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓரிரு நாளில் தமிழக ஆளுநர் மாற்றம் குறித்த செய்தி வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post தொடர்ந்து அவப்பெயரை வாங்கிக் கொடுக்கும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றமா? ஒன்றிய உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனை appeared first on Dinakaran.