ரூ.3 கோடியில் கட்டப்பட்ட பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜன.15ல் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்கிறார்

 

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் அன்று ஸ்ரீநற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இது ஒவ்வொரு ஆண்டும் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு ஆகும். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் காளைகள் அழைத்து வரப்படும். வீரர்களும் குவிவார்கள். இத்தகைய பிரசித்தி பெற்ற சூரியூரில் ரூ.3 கோடியில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மட்டுமின்றி கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலுக்கு இருபுறமும் மக்கள் உட்காரும் வகையில் கேலரி கட்டப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அடுத்தபடியாக 2வது ஜல்லிக்கட்டு மைதானமாக இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை வரும் பொங்கலன்று (15ம் தேதி) மாலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டு அதற்கான பணிகளும் துவங்கி உள்ளது.

Related Stories: