கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு

 

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு வாணாபுரம் ஒன்றியத்தை உருவாக்கி முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஆறு வாரத்துக்குள் ஆட்சேபனை மற்றும் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். 22 ஊராட்சிகள் ரிஷிவந்தியத்திலும், 38 ஊராட்சிகள் வாணாபுரம் ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டுள்ளன

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்கள் தலைமையில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு (High Level Committee) அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு தேதிகளில் கூடி இப்பொருண்மைகள் மீது விரிவான ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரிய கருத்துருக்கள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

“கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம் ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்படும். மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டுவதாக படிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம் என இரு ஊராட்சி ஒன்றியங்களாக பிரித்து ‘மறுசீரமைப்பு’ செய்வது தொடர்பாக மேலே 3-வதாக படிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் கீழ்கண்டவாறு கருத்துரு அனுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளில் 160 குக்கிராமங்கள் உள்ளன. இதன் பரப்பளவு 342.99 ச.கி.மீ ஆகும். மேலும் மொத்த மக்கள் தொகை 1,65,429 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) ஆக உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமான ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாணாபுரம் கிராம ஊராட்சியில் அமைந்துள்ளது.

எனவே, வாணாபுரத்தினை தலைமையிடமாக கொண்டு ஒரு ஊராட்சி ஒன்றியம் மற்றும் ரிஷிவந்தியத்தினை தலைமையிடமாக கொண்டு ஒரு ஊராட்சி ஒன்றியம் என்று இரண்டு ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்க வேண்டும் என்பது அப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். எனவே, 38 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி வாணாபுரம் கிராம ஊராட்சியை தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கிட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.

* ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தினை இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

புதியதாக ஊராட்சி ஒன்றியத்தினை உருவாக்கினால் விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். ரிஷிவந்தியத்தினை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியத்தினை உருவாக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும்.

இதனால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும். புள்ளி விவரங்கள் பெறுவதற்கும் ஏதுவாக திறம்பட செயலாற்ற இயலும். அதனால் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்றும் பின்தங்கிய பகுதியில் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எளிதில் சென்று சேரும். மேலும், வாழ்வாதாரம் மேம்படும். எனவே, மேற்படி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியமாக உள்ளது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து 22 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியமாக செயல்படவும் மற்றும் 38 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கவும் கோரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பரிந்துரை செய்து கருத்துருவினை அரசுக்கு அனுப்பி உரிய ஆணை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்காண் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்க முடிவு செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து பிற்சேர்க்கை 1-ல் உள்ளவாறு 22 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 38 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம் என்ற ஒரு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கியும் அரசு ஆணையிடுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் இந்த பதவிகளுக்கான அரசாணை நடைமுறைப்படுத்தப்படும்

 

Related Stories: