வாஷிங்டன்: உலக வர்த்தக போரை நோக்கி நகரும் அறிவிப்பாக சீனா இறக்குமதி பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் கடுமையான வரிகளை விதித்து வருகிறார். உலக வர்த்தகப் போரை டிரம்ப் தொடங்கிவிட்டதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் வல்லரசு சண்டை இருக்கும் நிலையில் தற்போது டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்காவிற்கு சீனா விதித்துள்ள 34 சதவீத பதிலடி வரியை 24 மணி நேரத்தில் திரும்ப பெறவில்லை என்றால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 104 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால், சீனாவும் அமெரிக்காவும் முழுமையான வர்த்தகப் போரை நோக்கி நகர்ந்துள்ளன. அமெரிக்காவின் வர்த்தக ஆதிக்கத்திற்கு எதிராக இறுதிவரை போராடுவோம் என்று சீனா அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மற்ற நாடுகளுக்கு வரிவிதிக்கும் போது, சீனப் பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கு 34 சதவீத வரியை சீனா விதித்தது. அதன்பின் அமெரிக்கா மேலும் 50 சதவீத வரியை அறிவித்தது. தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளுடன் சேர்த்து சீனப் பொருட்களுக்கு மொத்த வரி உயர்வு 104 சதவீதமாக உயர்த்த உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘பிளாக்மெயில்’ என்று சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடனான உரையாடலில், சீனப் பிரதமர் லீ கியாங் அளித்த பேட்டியில், ‘சீனா எந்தவொரு எதிர்மறையான நடவடிக்கையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பராமரிப்போம். இந்த ஆண்டு சீனாவின் பொருளாதாரக் கொள்கைகள், நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான முடிவு சர்வதேச வர்த்தக விதிகளை மீறும் வகையில் உள்ளது’ என்றார். டிரம்பின் பரஸ்பர வரிகள் என்று அழைக்கப்படும் புதிய வரிகள், உலகளாவிய பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார மந்தநிலையால் பல நாடுகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
டிரம்பின் புதிய வரிவிதிப்பு கொள்கையின்படி வரிகளை அதிகரிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர். அமெரிக்கா நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களை வரிகள் மூலம் பெறுகிறது. தனது வரிவிதிப்பு கொள்கையில் இருந்து பின்வாங்க மறுத்துள்ள டிரம்பின் அறிவிப்பால், அமெரிக்காவுடன் கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. எப்படியாகிலும் சீனாவின் பதிலடி வரிவிதிப்பு மற்றும் உள்நாட்டில் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், டிரம்ப் தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு சாதகமான சூழல்
அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில், ‘அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரானது இந்தியாவுக்கு நன்மையை தரும். அதற்கான தனது அணுகுமுறைகளை இந்தியா சரியாகப் பயன்படுத்த வேண்டும். முதலீடுகளை ஊக்குவிப்பது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பது, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவாக முன்னெடுப்பது ஆகியன மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. உலகளாவிய இரு பொருளாதார நாடுகளுக்கு இடையேயான மோதலால், பல நாடுகள் வர்த்தக பிரச்னைகளை எதிர்கொண்டிருந்தாலும், தற்போதைய சூழல் இந்தியாவுக்கு பயனளிக்கும்.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையானது, குறுகிய காலத்தில் தனக்கு தானே தோல்வியை ஏற்படுத்திக் கொண்ட திட்டமாக தான் பார்க்கிறேன். அமெரிக்க பொருளாதாரம் மெதுவாக இறங்குமுக நிலையை நோக்கி செல்லும். அமெரிக்காவை பெரிதும் நம்பியிருக்கும் வியட்நாம் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம். அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. இதனால் சில பாதிப்புகள் மட்டுமே ஏற்படும். டிரம்பின் அறிவிப்பால் இந்திய பொருளாதாரத்தின் தன்மையையோ, அதன் வளர்ச்சியையோ பெரிய அளவில் மாற்றிவிடாது. இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறை அதிகமாக இருக்கும் சீனாவுடனும் உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
சீனாவை விட்டு வெளியேற விரும்பும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் தளம் அமைத்து தரவேண்டும். இந்திய உள்நாட்டு சந்தையின் ஈர்ப்பு மற்றும் குறைந்த அமெரிக்க வரிவிதிப்பு மூலம் அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும். ஆனால் நமது உத்திகளை சரியாக வெளிப்படுத்த வேண்டும். அமெரிக்க வரிகளால் உருவாக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக பரிமாற்றங்கள், இந்தியாவின் பணவீக்கத்தைக் குறைக்க உதவலாம். இந்திய ஏற்றுமதியாளர்கள் கிழக்கு ஆசியாவில் சந்தைகளை விரிக்க முடியும். அமெரிக்காவில் நுழைய முடியாத சீனப் பொருட்கள் இந்தியாவிற்குள் வர வாய்ப்புள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு சாதகமான சூழல்கள் உருவாகி உள்ளன. இந்த நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று கூறினார்.
The post உலக வர்த்தக போரை நோக்கி நகரும் அறிவிப்பு; சீனா இறக்குமதி பொருட்களுக்கு 104 சதவீதம் வரி: 24 மணி நேரத்தில் 34% வரியை திரும்ப பெற டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.