சென்னை: 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநரின் ஆணவத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி என பொன்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட காலம் நிறுத்தி வைத்தும், பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதம் எனவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் தான்தோன்றித்தனமான ஆணவத்திற்கு கிடைத்த சம்மட்டி அடியாகும். ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியவர். அவருக்கென்று எந்த தனி அதிகாரம் எதுவுமில்லை.
அவருடைய செயல்பாடுகள் சட்டத்தை மீறியதாகவும், உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளது. இவரது போக்கு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்தத் தீர்ப்பின் மூலம் இந்திய இறையாண்மை, அரசியல் அமைப்பு சட்டம், தேச ஒற்றுமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை, புரிதலை அளித்துள்ளது. இந்த மகத்தான தீர்ப்பு ஜனநாயகத்தை, கூட்டாட்சி தத்துவத்தை வளர்த்தெடுப்பதற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post 10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநரின் ஆணவத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி: பொன்குமார் காட்டம் appeared first on Dinakaran.