*பெண் காவலருக்கு பாராட்டு
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் கேரள சுற்றுலா பயணி தவறவிட்ட கை பையை டூரிசம் விங் பெண் காவலர் மீட்டு அவரிடம் ஒப்படைத்தார்.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
வரும் வாரங்களில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை சீசனின்போது வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் ஊட்டியில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் தயராகி வருகின்றன.
கூட்டம் அதிகளவு வரும் நிலையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்குமாறும், விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்துடன் பார்த்து கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணி ஒருவர் பழங்குடியினர் பண்பாட்டு மைய சாலையில் இருந்து தாவரவியல் பூங்காவுக்கு செல்லும் வழியில் பணம் மற்றும் ஒரு சில முக்கிய பொருட்கள் இருந்த கைப்பையை தவற விட்டு விட்டார்.
அப்போது சாலையில் கிடந்த கை பையை டூரிசம் விங்கை சேர்ந்த நர்மதா என்ற பெண் போலீஸ் அந்த பையை எடுத்து தவறவிட்ட சுற்றுலா பயணி வந்து பெற்றுக் கொள்ளலாம் என மைக் மூலம் அறிவிப்பு செய்தார்.
பெண் போலீஸ்காரர் எடுத்த பையில் மலையாள எழுத்துக்கள் இருந்ததால் மலையாளத்திலும் ஒலிபெருக்கி மூலம் விவரத்தை கூறினார். இதைக்கேட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த புஷ்பா என்ற சுற்றுலா பயணி அடையாளங்களை கூறி பையை பெற்றுக்கொண்டு போலீசாருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.
The post தாவரவியல் பூங்கா சாலையில் கேரள சுற்றுலா பயணி தவறவிட்ட கைப்பை ஒப்படைப்பு appeared first on Dinakaran.