அரசு பள்ளி ஆசிரியர் மீது பரபரப்பு புகார்

கிருஷ்ணகிரி, ஏப்.8: வேப்பனஹள்ளி அருகே, அரசு பள்ளி ஆசிரியர் 13 ஆண்டுகளில் 1,700 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ள நிலையில், அவரது பணி பதிவேடுகளை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், அலேகுந்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன்(50). இவர் கடந்த 2008ம் ஆண்டு கண் பார்வை குறைவு, இரண்டு கைகளும் ஊனம் எனக்கூறி, 18 வயதிற்குட்பட்டோருக்கு வழங்கப்படும் சான்றிதழை 34 வயதில் வாங்கியுள்ளார். தொடர்ந்து பணியில் சேரும்போது, அதாவது 2010ம் ஆண்டு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார். இதனை தேர்வு குழுவினர் கவனிக்க தவறியதாக தெரிகிறது. அதேபோல், கடந்த 2009ம் ஆண்டு பி.எட்., பி.ஏ., ஆகிய இரண்டு படிப்புகளையும் முடித்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அவரது 15 ஆண்டு ஆசிரியர் பணிக்காலத்தில், கொரோனா காலத்தை தவிர்த்து, 13 ஆண்டுகளில் 1700 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு நாட்கள் இல்லாமல், 21 மாதங்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக ஊக்க ஊதியம் பெற்று வருகிறார். இதுதொடர்பாக யாராவது கேட்டால், அவர்களை மிரட்டுகிறார். இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலகிருஷ்ணனின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சான்று, பணி பதிவேடு உள்ளிட்டவற்றை, விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளி ஆசிரியர் மீது பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: