நீட் தேர்வு முறையை அகற்றுவதற்காக முதல்வர் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்: தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 4ம் தேதி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நீட் தேர்வை அகற்றுவது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனை கூட்டம் 9ம் தேதி (இன்று) தலைமை செயலகத்தில் நடத்த உள்ளது. அதில் நமது சட்டமன்ற கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்’’ என்று கூறினார்.

முதல்வரின் அறிவிப்புபடி, இன்று மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடி கூட்ட அரங்கில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இதில் பங்கேற்க அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விசிக, மார்க்சிய கம்யூ., இந்திய கம்யூ, மமக, கொமதேக, தவாக, புரட்சி பாரதம் உள்ளிட்ட சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்க மாட்டோம் என்று நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மற்ற கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

The post நீட் தேர்வு முறையை அகற்றுவதற்காக முதல்வர் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்: தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: