நெல்லை அருகே கார்கள் மோதலில் பலி 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணநிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நெல்லை அருகே கார்கள் மோதலில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம், தளபதிசமுத்திரம் பகுதி-1 கிராமம், கீழூர் வீரநங்கை அம்மன் கோயில் அருகில் திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார்களில் பயணம் செய்த 16 பேரில் தனிஸ்லாஸ் (68), மார்கரெட் மேரி (60), ஜோபர்ட் (40), அமுதா (35), குழந்தைகள் ஜோபினா (8), ஜோகன் (2) மற்றும் மேல்கேஸ் (60) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர் என்ற துயர செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

காயமடைந்த 7 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post நெல்லை அருகே கார்கள் மோதலில் பலி 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணநிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: