தனிநபர் சொந்த வீடுகள் கட்டுகிற திட்டம் கனவு இல்லை, கனவு நனவாகியிருக்கிறது: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதிலடி

சென்னை: சட்டமன்றப் பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கையின் போது வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியன் (அதிமுக) பேசுகையில், “அரசு எம்சாண்ட் ரூ.5,000க்கும் விற்பனை செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், ரூ.2,100-க்கு விற்ற ஜல்லி ரூ.4,000 என்றால், ரூ.1,900 ஒரு யூனிட்டிற்கு, ஒரு மாதத்தில் அதிகமாகியிருக்கிறது. இதற்கு அரசினுடைய தவறான வரிவிதிப்பும், கொள்கை முடிவும்தான் காரணம்” என்றார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது: ஜல்லி, எம்சாண்ட் விலைகளை எல்லாம் ஆயிரம் ரூபாய் உயர்த்தினார்கள். அன்று இரவு பேசி, முடிவு செய்து விலைகளைக் குறைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுச் சென்றுள்ளார்கள். நீங்கள் இவற்றை மறந்திருப்பீர்கள்.
ஓ.எஸ். மணியன்: இல்லை, ரூ.1,900 அதிகமாகி இருக்கிறது. இதை நான் எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கொடுத்திருக்கிறீர்கள். அந்த நிதியை இனிமேல் அதிகரித்து கொடுக்கப்போவது இல்லை. இதை குறைக்கவில்லை என்றால், அந்தக் கனவு திட்டம், கனவு திட்டமாகத்தான் இருக்கும்.

அமைச்சர் ஐ.பெரியசாமி: கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகளை நாங்கள் கொடுத்தோம். தற்போது ஒரு லட்சம் வீட்டிற்கு ஆணை கொடுத்திருக்கிறோம். வேலையும் துவங்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு துவங்கிய ஒரு லட்சம் வீடுகளில், இதுவரையில் 80 ஆயிரம் வீடுகள் முடிந்திருக்கின்றன. கனவு இல்லை, கனவு நினைவாகியிருக்கிறது.
ஓ.எஸ். மணியன்: சாலைகளில் அமைக்கப்படும் வேகத் தடைகளை ஓரே மாதிரியாக அமைத்திட ஆணையிட வேண்டும். சாலைகளில் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனைத் தடுத்திட சாலை விதிகளை மதித்து நடந்திட சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். அமைச்சர் எ.வ.வேலு: விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. அதை குறைப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைக்காக சென்ற ஆட்சியில் 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுக் காலத்திலே 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே சாலைப் பாதுகாப்பு மேம்பாடு, கருப்புப்புள்ளி மேம்பாடு, ஹாாட் ஸ்பாட் மேம்பாடு, சாலை உபகரணங்கள், கிராஸ்ட்-ரோலர் பியரிங்க்ஸ் என்ற அடிப்படையிலே இந்த விபத்துகளைக் குறைப்பதற்காக இத்தனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

The post தனிநபர் சொந்த வீடுகள் கட்டுகிற திட்டம் கனவு இல்லை, கனவு நனவாகியிருக்கிறது: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: