காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலும் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். குஜராத்தில் 60 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்க உள்ள இந்த காங்கிரஸ் மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதன்படி சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் காங்கிரஸ் செயற்குழு நேற்று கூடியது. இதில் கட்சி தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் என 170 தலைவர்கள் பங்கேற்றனர். இதில், கட்சியின் எதிர்கால செயல்திட்டம், முக்கிய தேசிய பிரச்சினைகள், அமைப்பை வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதித்தனர். செயற்குழு 2வது நாளாக இன்றும் கூடி விவாதிக்க உள்ளது.
இதில், மாவட்ட காங்கிரஸ் குழுக்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது குறித்து, சமீப காலங்களில் நடந்த பல கூட்டங்களில் கட்சித் தலைவர் கார்கே கூறியபடி, கட்சியில் புத்துணர்ச்சி தொடர்பான பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கான கட்சியின் உத்திகள் குறித்தும் விவாதித்து இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும், படேல்-நேரு இடையேயான நல்லுறவை மத விரோதம் மற்றும் பிரிவினையின் சக்திகள் குறைமதிப்பிற்கு உட்படுத்த போலி கதைகளை கட்டவிழ்த்துவிடுகின்றன.
எனவே, மீண்டும் ஒருமுறை, அந்த சக்திகளை தோற்கடிப்பதற்கும், போலி செய்தி தொழிற்சாலையை அம்பலப்படுத்துவதற்கும் சர்தார் படேலின் வாழ்க்கைக் கொள்கைகளைப் பின்பற்ற காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். முன்னதாக, செயற்குழு கூடுவதற்கு முன்பாக கார்கே மற்றும் ராகுல் காந்தி டெல்லியில் அம்மாநில தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
* ஆர்எஸ்எஸ் கருத்துக்களுக்கு முரணானவர் சர்தார் படேல்
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கார்கே, ‘‘கடந்த 140 ஆண்டுகளாக நாட்டிற்காக சேவை செய்து போராடிய புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பாக காட்ட எதுவும் இல்லாதவர்கள் (பாஜ, ஆர்எஸ்எஸ்சை மறைமுகமாக குறிப்பிட்டார்) இந்த வேலையை செய்கிறார்கள். சர்தார் படேலும், நேருவும் ஒரே நாணயத்தின் இரு பக்கத்தை போன்றவர்கள்.
ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் என்பதாக காட்ட சதி செய்கின்றனர். படேலின் சித்தாந்தம் ஆர்எஸ்எஸ்சின் கருத்துக்களுக்கு முரணானது. அந்த அமைப்பை தடை செய்தவர் படேல். ஆனால் இன்று ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள், படேலை சொந்தம் கொண்டாடுவது நகைப்புக்குரியது’’ என்றார்.
* மக்கள் நலனில் தன்னை அர்ப்பணித்துள்ளது காங்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் தலைமையிலான பல நிலைக்குழுக்கள் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த பல பரிந்துரைகளை வழங்கி உள்ளன. சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான விவசாயக் குழு, திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு குழு, சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் குழு ஆகியவை மக்களுக்கு பயனுள்ள பல முக்கிய பரிந்துரைகளை வழங்கி உள்ளன.
இவை, மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. எதிர்க்கட்சியில் இருந்தாலும், இந்திய மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக போராட ஒவ்வொரு ஜனநாயக நிறுவனத்தையும் நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம்’’ என்றார்.
* பெரிய அளவில் மாற்றங்கள்
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், ‘‘நாங்கள் ஒரு பெரிய அளவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்ய உள்ளோம். அதற்கான வழிகாட்டுதல்கள் இருக்கும். கட்சியின் மாவட்ட பிரிவுத் தலைவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. சர்தார் படேல் காட்டிய பாதையில் எங்கள் கட்சி நடக்கும். இதுதொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்’’ என்றார்.
* மயங்கி விழுந்தார் ப.சிதம்பரம்
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் ப.சிதம்பரம் திடீரென மயங்கி சரிந்தார். அவரை உடனே கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி தனது எக்ஸ் பதிவில்,’ என் அப்பா ப.சிதம்பரம், அகமதாபாத்தில் கடுமையான வெப்பத்தால் ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். தற்போது இயல்பான நிலையில் உள்ள அவரது உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்’ என்றார். கார்த்தி சிதம்பரத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
The post குஜராத்தில் படேல் நினைவிடத்தில் காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது: கார்கே, சோனியா, ராகுல் பங்கேற்பு; தீர்மானங்கள் இன்று நிறைவேற்றம் appeared first on Dinakaran.