தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் : குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக் கழக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுகணக்கில் அவற்றைக் கிடப்பில் போட்டுவைத்ததுடன், தனது சட்டப்பூர்வமான கடமையையும் ஆற்றாமல், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று உச்ச நீதிமன்றம் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளது. அவரது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பின்புலம் அவரை முரட்டுப் பிடிவாதக்காரராக வளர்த்தெடுள்ளது. அதனால் அவருக்கு இந்த மூக்கறுப்பு இன்று நடந்தேறியுள்ளது.

மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு, 10 மசோதாக்களை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புவது சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி தவறானது. அத்துடன், 10 பல்கலைக் கழக மசோதாக்கள் மீதும் குடியரசுத் தலைவர் எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் பொருத்த மற்றவையாகும். ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டதாக அறிவித்ததற்கு முன்பு நீண்டகாலம் எதுவும் சொல்லாமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளிலேயே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இது ஆர்.என்.ரவிக்கு மட்டுமின்றி பாஜக அல்லாத மாநில அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு முடக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கும் பாடமாக அமைந்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டது. இதற்குப் பிறகும் ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் தொடர்வது முறையல்ல. தானே முன்வந்து பதவி விலகும் அளவுக்கு அவர் பக்குவம் நிறைந்த பண்பாளர் அல்ல. எனவே, முனைவர் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகக் குற்றம் இழைத்த அவரை ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அனுமதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும் என்பதால் குடியரசுத் தலைவர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இயற்றும் சட்ட மசோதாவை இனிமேல் ஆளுநர் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்ற காலக்கெடுவையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இது, அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்த உறுப்புகளுக்கு இதுவரை தவறாகப் பொருள் சொல்லி வந்த நபர்களுக்குப் போடப்பட்ட கடிவாளமாகும். அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதிலும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

ஒன்றிய பாஜக அரசால் அரசமைப்புச் சட்டம் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகிவரும் சூழலில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் ஆட்சியின்மீதும் வெகு மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. மாநில உரிமைகள் என்னும் களத்தில் இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்மாதிரிகளை உருவாக்கும் சிறப்பு பெற்ற தமிழ்நாடு அரசுக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். இந்தச் சட்டப் போராட்டத்தை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையை வென்றெடுத்துத் தந்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் : குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: