கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான அதிகபட்ச வரியாக டன் ஒன்றிற்கு ரூ.7000 நிர்ணயம்: சுரங்கத்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை: புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
‘தமிழ்நாடு கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரி விதிகள், 2025’ என்கிற புதிய விதி தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டுள்ளது. இந்த விதிகள் அரசிதழில் 4.4.2025ல் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி 32 கனிமங்களுக்கு வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெருங்கனிம குத்தகைதாரர்களால் சுரங்கம் செய்து எடுத்து செல்லும் பெருங்கனிமங்களுக்கு ராயல்டி, மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி, தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை நிதி மற்றும் வருமான வரி செலுத்தப்படுகிறன்றன. சிறுகனிம குத்தகைதாரர்களால் குவாரி செய்து எடுத்துச் செல்லப்படும் சிறுகனிமங்களுக்கு உரிம தொகை, மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி, பசுமை விதி மற்றும் வருமான வரி செலுத்தப்படுகின்றன.

குத்தகைதாரர்களால் செலுத்தப்படும் மேற்கண்ட இனங்கள் தவிர தற்போது 4.4.2025 முதல் கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரி கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான அதிகபட்ச வரியாக சிலிமனைட் கனிமத்திற்கு டன் ஒன்றிற்கு ரூ.7000 மற்றும் குறைந்தபட்ச வரியாக களிமண் கனிமத்திற்கு டன் ஒன்றிற்கு ரூ.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரிச் சட்டத்தின்படி தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.2400 கோடி வருவாய் கிடைக்கும்.

The post கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான அதிகபட்ச வரியாக டன் ஒன்றிற்கு ரூ.7000 நிர்ணயம்: சுரங்கத்துறை ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: