சிறப்பு முகாமில் மொத்தம் 11,022 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றுள் மின்கட்டண குறைபாடு தொடர்பாக பெறப்பட்ட 1,394 மனுக்களில் 675 மனுக்களுக்கும், மின் மீட்டர் குறைபாடு தொடர்பாக பெறப்பட்ட 371 மனுக்களில் 203 மனுக்களுக்கும், சேதமடைந்த மின் கம்பங்கள் தொடர்பாக பெறப்பட்ட 2,278 மனுக்களில் 18 மனுக்களுக்கும், குறைந்த மின்னழுத்தம் தொடர்பாக பெறப்பட்ட 1,532 மனுக்களில் 12 மனுக்களுக்கும், பெயர் மாற்றம் உள்ளிட்ட மற்ற புகார்கள் தொடர்பாக பெறப்பட்ட 5,547 மனுக்களில் 1,068 மனுக்களுக்கும் நேற்றே தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள பழுதான மின் மீட்டர்கள் 2 அல்லது 3 நாட்களுக்குள்ளும், மின் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு ஒருவார காலத்திற்குள்ளும், பழுதான மின்கம்பங்கள் 15 நாட்களுக்குள் மாற்றப்படும். மேலும் மின்னமுத்த குறைபாடு போன்ற புகார்களின் மீது உரிய மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு குறித்த காலத்திற்குள் சரிசெய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை வள்ளுவர்கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தி.நகர் மற்றும் மயிலாப்பூர் கோட்டங்களின் சார்பில் நடந்த மின் நுகர்வோர் ஒருநாள் சிறப்பு முகாமில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து முகாமில் கலந்துகொண்ட மனுதாரர்களின் கோரிக்கையை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மின் பகிர்மான இயக்குநர் மாஸ்கர்னஸ் பெரம்பூர், அண்ணாநகர், ஆவடி, பல்லாவரம் மற்றும் வியாசர்பாடி கோட்ட அலுவலகங்களில் நடந்த ஒருநாள் முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் சகாயராஜ், மத்திய மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன், தி.நகர் செயற்பொறியாளர் வெங்கடேசன், மயிலாப்பூர் செயற்பொறியாளர் உதயகுமார், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
The post தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக நடைபெற்ற மின் நுகர்வோர் ஒருநாள் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட 11,022 மனுக்கள்: 1,976 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.