திட்டக்குடி : கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள அண்ணா நகர் அருகே வெலிங்டன் நீர்தேக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்வதற்காக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலையின் இருபுறங்களிலும் கோழி கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டிக் கிடக்கிறது.
இதனால் அவ்வழியாக காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் விவசாய நிலத்திற்கு செல்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி இதன் அருகில் அண்ணா நகர் பகுதி உள்ளதால் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. தற்போது ஆங்காங்கே டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
திட்டக்குடி நகராட்சி சார்பில் வாகனம் மூலம் தினந்தோறும் கோழி கழிவுகளை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில இறைச்சி கடை உரிமையாளர்கள் கோழி கழிவுகளை கொட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.
பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் தொற்று ஏற்படுவதுற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இங்கு கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக அப்பகுதியில் கோழி கழிவுகள் கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திட்டக்குடி அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகள் appeared first on Dinakaran.