எம்புரான் படத்தில் இருந்து பெரியாறு அணை குறித்த காட்சி நீக்கம்: முதல்வர் தகவல்

பேரவையில் வேல்முருகன் (தவாக) பேசுகையில், ‘‘தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்னையாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக இருக்கின்ற முல்லைப் பெரியாறு. அந்த அணை பேராபத்து விளைவிக்கக்கூடிய அணை என்றும், அந்த அணை உடைந்தால் கேரள மாநிலம் முற்றும் முதலுமாக அழியும் என்றும் இன்றைக்கு எம்புரான் என்கின்ற படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த படம் தற்போது, தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடப்பட்டு, தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும்” என்றார்.

* அமைச்சர் துரைமுருகன்: நான் அந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் சொன்னதை கேட்டபொழுது, ஒரு பக்கத்தில் பயமும், இன்னொரு பக்கம் கோபம்தான் வரும். ஆனால், பிரச்னை ஒன்றை தெரிவிக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை செய்திருந்தால், அது தேவையற்ற ஒன்றுதான் என்று கருதுகிறேன். வேறு ஒரு மாநிலத்தில் இந்த பிரச்னை கிளப்பக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின்: சென்சாரில் அந்த காட்சியை நீக்கவில்லை. ஆனால் படம் வெளியான பிறகுதான், இந்த செய்தி வெளியே வந்து, அதற்கு பிறகு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கின்றன.

The post எம்புரான் படத்தில் இருந்து பெரியாறு அணை குறித்த காட்சி நீக்கம்: முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: