விருதுநகரில் அதிகாலை பயங்கர தீவிபத்து: 24 குடிசைகள் எரிந்து நாசம்

விருதுநகர்: விருதுநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதில் ஏராளமான பொருட்கள் நாசமாகின. விருதுநகர், பெருமாள் கோயில் தெருவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பேட்டையில் 100க்கும் மேற்பட்டோர் குடிசைகள் மற்றும் தகர செட் அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள ராஜா என்பவரது வீட்டில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனால் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்தன.

இதையடுத்து சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர். அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் 24 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. வீடுகளில் இருந்த ரேஷன் கார்டுகள், பத்திரங்கள், ரொக்கப் பணம், நகைகள், பள்ளிச் சான்றிதழ்கள், பாத்திரங்கள், டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து போனது. விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிந்து, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் ராஜகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குருசாமி, பாஜ கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினர்.

The post விருதுநகரில் அதிகாலை பயங்கர தீவிபத்து: 24 குடிசைகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: