பங்குனி மாத பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பள்ளிகொண்டா, ஏப்.3: வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் 12 நாள் பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு உற்சவ விநாயகர் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து 12 நாள் பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும், மரகதாம்பிகை உடனுறை உற்சவ மார்க்கபந்தீஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் உற்சவ மண்டபத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர், உற்சவ விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், 58 அடி உயரமுள்ள கொடி மரத்தில் விநாயகர், முருகர், சிவசிவ, ஓம், சக்தி, மயில் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடிசீலைக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்ளாக பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர பிரமோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி மாட வீதிகளில் திருவீதி உலா நடந்தது. மேலும், அடுத்தடுத்த 5 நாட்களில் தினமும் காலை 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளும், பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளுல் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7வது நாளான வரும் 8ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் செண்பகம், செயல் அலுவலர் பிரியா, திருக்கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பங்குனி மாத பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: