ஆலந்தூர்: பல்லாவரம், ஆலந்தூர், மடிப்பாக்கம் போன்ற மாநகராட்சி எல்லைகளுக்கு இடையே மூவரசம்பட்டு ஊராட்சி பகுதி உள்ளது. இந்த ஊராட்சி பகுதிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. மூவரசம்பட்டு பகுதியில் தினமும் சேரும் குப்பைகளை மூவரசம்பட்டு ஏரியை ஒட்டி அமைக்கப்பட்ட குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு பின்னர் வேங்கடமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. நிதி நெருக்கடி காரணமாக அங்கு குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக தாம்பரம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கும் குப்பைகளை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக மூவரசம்பட்டு குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் அகற்றப்படாததால் மலைபோல் தேங்கி காணப்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் இயங்கும் ஓட்டல்கள், காய்கறி கடைகள், மீன் மற்றும் கோழிக்கறி கடைகளின் கழிவுகள் இந்த ஏரியில் கொட்டுகின்றனர். அவற்றை உண்பதற்காக வரும் நாய்கள், மாடுகள், குப்பைகளை கிளறும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இதையொட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்லும் இஸ்லாமியர்களும் துர்நாற்றத்தால் குமட்டல் வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த குப்பை கழிவுகளால் அடிக்கடி தொற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறுகின்றனர். குப்பைமேட்டில் அலுமினியம், இரும்பு, செம்பு வயர்கள் போன்றவற்ற சேகரிக்க வருபவர்கள் தீமூட்டி விட்டு செல்கின்றனர். இந்த புகை நெடியால் தூங்க முடியாமல் சிரமப்படுகிறோம்.
இந்த குப்பை கிடங்கையொட்டி ஏரி உள்ளதால் மக்கள் பயன்படுத்தும் நீர் மாசுபடுகிறது’ என்றனர். இதுகுறித்து மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.விவேகானந்தர் கூறுகையில், ‘மூவரசம்பட்டு குப்பை தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதி கேட்டு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். கிடைத்தவுடன் 2, 3 நாட்களில் குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார். குப்பை கிடங்கு மட்டுமின்றி பள்ளிக்கூடம், கடைகள், சாலையோரம் போன்றவற்றிலும் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும்’ என்றார்.
The post மூவரசம்பட்டு ஏரி பகுதியில் குப்பை கிடங்கால் துர்நாற்றம் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.