பட்டுப்புழு வளர்ப்பில் லாபம் பார்க்கும் தர்மபுரி இன்ஜினியர்!

எனது அப்பாதான் எங்கள் பகுதியில் முதன்முதலில் பட்டுப்புழு வளர்ப்பைத் தொடங்கினார். 2010ல் அப்பாவால் தொடங்கப்பட்ட இந்தப் பட்டுப்புழு வளர்ப்பை, இப்போது நான் செய்து வருகிறேன்’’ என்கிறார் தர்மபுரி மாவட்ட விவசாயியான சதீஷ்குமார். தர்மபுரியில் இருந்து 38 கி.மீ தொலைவில் உள்ள சாலைவலசு என்ற கிராமத்தில் இருக்கிறது இவரது மல்பெரி தோட்டமும், பட்டுப்புழு வளர்ப்புக்கூடமும். பி.இ இன்ஜினியரிங் படித்துவிட்டு, பட்டுப்புழு வளர்ப்பை மேற்கொண்டு வரும் சதீஷைச் சந்திக்க அவரது கிராமத்திற்குச் சென்றிருந்தோம். மல்பெரி செடிகளுக்கு உரமிட்டுக்கொண்டிருந்த சதீஷ் எங்கள் வருகையைக் கண்டதும் வரவேற்றார். மல்பெரி தோட்டம், பட்டுப்புழுக்கூடம் என அனைத்தையும் சுற்றிக் காண்பித்தவாறே பட்டுப்புழு வளர்ப்பு குறித்து பேசத் தொடங்கினார்.

“நான் பி.இ இன்ஜினியரிங் படித்துவிட்டு, அரசுத் தேர்வுக்குப் படித்து வருகிறேன். 2010ல் இருந்தே அப்பாதான் பட்டுப்புழுவை வளர்த்து, பட்டுக்கூடுகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். சின்ன வயதிலிருந்தே, அவருக்குத் துணையாக அந்த வேலையை நானும் செய்து வந்தேன். இப்போது, ஒரு பக்கம் அரசுப்பணிக்காக படிப்பு, இன்னொரு பக்கம் இந்த பட்டுப்புழு வளர்ப்பு என இயங்கி வருகிறேன். எங்களுக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 2 ஏக்கரில்மல்பெரி செடிகளை வளர்த்து வருகிறேன். பட்டுப்புழு வளர்ப்பதற்காக தனியாக ஒரு ஷெட் அமைத்து, அங்கு பட்டுப்புழுக்களை வளர்க்கிறேன். வருடத்திற்கு6 முறை பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுக்கூடு விற்பனை செய்கிறேன்.

சராசரியாக பட்டுப்புழுவை வளர்த்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்வதற்கு 45 நாட்கள் ஆகும். முதலில், இளம்பட்டுப்புழுக்களை வாங்கி வளர்க்க வேண்டும். நான், 100 முட்டைத் தொகுதிகள் வாங்குவேன். அவற்றுள் சராசரியாக 50 ஆயிரம் பட்டுக்குஞ்சுகள் இருக்கும். அவற்றை எனது ஷெட்டிற்கு கொண்டுவந்து 21 நாட்கள் நல்ல முறையில் வளர்த்து பட்டுக்கூடு உற்பத்தி செய்வேன். இந்த, 21 நாட்களில் பட்டுப்புழு வளர்ப்பில் 5 ஸ்டேஜ் இருக்கிறது. முதல் ஸ்டேஜ் இளப்புழுக்கள் முட்டைத் தொகுதியில் இருப்பது. இரண்டாவது ஸ்டேஜ் பட்டுப்புழுக்களை வாங்கிவந்து முதல் மூன்று நாட்கள் வளர்ப்பது. இந்த மூன்று நாட்கள் பட்டுப்புழுக்களுக்கு நன்கு வளர்ந்த மல்பெரி இலைகளை கொடுக்கக்கூடாது. இளம்புழுக்கள் சாப்பிடுவது மாதிரி, இளம் இலைகளை செடியின் மேலே உள்ள இலைகளை கொடுக்க வேண்டும். பின், அடுத்த மூன்றாம் ஸ்டேஜ், நான்காம் ஸ்டேஜில் பட்டுப்புழுக்களுக்கு கொடுக்கக்கூடிய மல்பெரியின் அளவை அதிகரித்துக்கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு ஸ்டேஜிலும் பட்டுப்புழு தனது தோலை உரித்து உரித்து தன்னையே புதுப்பித்து வெளியேறும். ஐந்தாவது ஸ்டேஜ்தான் பட்டுக்கூடு தயாரிப்பது. நான்கு ஸ்டேஜ்களுக்குப் பிறகு, அடுத்த 6வது நாள் பட்டுக்கூடுகள் உற்பத்தியாகும். அந்தப் பட்டுக்கூடுகளைத்தான் விற்பனை செய்ய வேண்டும்.

இந்த பட்டுப்புழு வளர்ப்புக்கு சீதோஷ்ண நிலை மிகவும் முக்கியம். வெயில் காலம், மழைக்காலம் என எதுவாக இருந்தாலும், பட்டுப்புழு வளர்ப்புக் கூடத்திற்குள் வெப்பநிலை 30 டிகிரி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் பார்த்துக்கொள்கிறேன். பட்டுப்புழு வளர்ப்பை பொறுத்தவரை, எந்த நோயும் வருவதற்கு முன்பே காக்க வேண்டும். நோய் வந்த பின் எந்த மருந்து கொடுத்தாலும் தாக்கம் குறையாது. பால்புழு நோய், பிளாச்சி இந்த இரண்டு நோய்களும் அதிக வெப்பநிலை மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் உண்டாகும். அதேபோல், ஈரப்பதம் அதிகமாக உள்ள மல்பெரிகளை உணவாகக் கொடுக்கும்போது இந்நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், பட்டுப்புழு வளர்ப்பை சரியான முறையில் செய்ய வேண்டும். இந்த நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் இருக்கும்போது, விஜிதா சப்ளிமென்ட் மற்றும் சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றை புழுக்களுக்கு மேல் தூவி நோய் தாக்கத்தை கட்டுக்குள் வைப்பேன்.

இந்த முறையில் உற்பத்தியாகிறபட்டுக்கூடுகளை தர்மபுரி மாவட்ட அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை செய்வேன். ஒவ்வொரு45 நாட்களுக்கு ஒருமுறையும், அதாவது ஒவ்வொரு முறை பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்யும்போதும் எனக்கு 90 கிலோ பட்டுக்கூடுகள் வரை கிடைக்கிறது. ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.800க்கு விற்பனை ஆகிறது. அந்த வகையில் ரூ.72 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். மற்ற விவசாயத்தை விட பட்டுப்புழு வளர்ப்பு லாபகரமான தொழில். ஒரு பக்கம் படித்துக்கொண்டே மறுபக்கம் பட்டுப்புழு வளர்த்து லாபம் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவாக இருக்கிறது’’ என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
தொடர்புக்கு:
சதீஷ்குமார் 89732 15322.

பட்டுப்புழு முட்டைத்தொகுதி, மல்பெரி செடிகளுக்கு உரம், பட்டுப்புழு கூடம் பராமரிப்பு, பட்டுப் பூச்சிகளுக்கு மருந்து என ஒருமுறை பட்டுக்கூடு உற்பத்தி செய்ய, 20 ஆயிரம் வரை செலவாகிறது. பட்டுக்கூடுகள் விற்பனையில் இருந்து கிடைக்கும் ரூ.72ஆயிரத்தில் 20 ஆயிரம் செலவு போனாலும் கூட, மீதி 52 ஆயிரம் லாபம்தான் என்கிறார் சதீஷ்.

 

Related Stories: