தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் வாகனத்திற்கு முன்னால் போலீசார் ரோந்து வாகனமும், பின்னால் பாதுகாப்பு படையினரின் வாகனங்களும் அணிவகுத்துச் செல்லும். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சென்னைக்கு விமானத்தில் திரும்பினார். அவரை அழைத்து வர கிண்டி ராஜ்பவனில் இருந்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஆளுநரின் டம்மி கான்வாய் வாகனங்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்தன. பாதுகாப்பு படையினரின் கான்வாய் வாகனங்கள் விமான நிலையத்தின் கேட் எண்:6 வழியாக, பழைய விமான நிலையத்திற்குள் செல்ல ஜிஎஸ்டி சாலையில் திரும்பி சென்று கொண்டு இருந்தது.
அப்போது, ஜிஎஸ்டி சாலையில், பல்லாவரத்தில் இருந்து கிண்டி நோக்கி அதிவேகமாக பல்சர் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், சிவப்பு சிக்னல் ஒளிர்ந்த நிலையில், அதனை மதிக்காமல் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தார். மோதிய வேகத்தில் பைக் அப்பளம்போல் நொறுங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் கான்வாய் வாகனங்களை உடனே நிறுத்தினர்.
தகவலறிந்து பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் காரில் இருந்து வெளியே வந்து சுற்றிலும் நோட்டம் விட்டனர். பாதுகாப்பு படையினர் ஒரே நேரத்தில் துப்பாக்கிகளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கீழே இறங்கியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.இதையடுத்து, போலீசார் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினரின் கான்வாய் வாகனங்கள் விமான நிலையத்திற்குள் சென்றது. பின்னர், விமானத்தில் வந்து இறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்துக்கொண்டு கான்வாய் வாகனங்கள் ராஜ்பவனுக்கு புறப்பட்டு சென்றன. இந்த விபத்தால் ஆளுநர் பயணத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனிடையே, ஆளுநரின் கான்வாய் வாகனம் மீது மோதிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பரங்கிமலை பூந்தோட்டம் 2வது தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பதும், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் படித்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post பரங்கிமலையில் பரபரப்பு; ஆளுநரின் கான்வாய் மீது பைக் மோதி நொறுங்கியது: மருத்துவ கல்லூரி மாணவன் படுகாயம் appeared first on Dinakaran.