கோத்தகிரி அருகே பரபரப்பு ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பயணி கால் நசுங்கியது: சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே ஓடிய பேருந்தில் இருந்து இறங்கிய ஆண் பயணி பின் சக்கரத்தில் சிக்கியதில், இடது கால் நசுங்கி படுகாயம் அடைந்தார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் நேற்று முன்தினம் மாலை தவிட்டு மேடு பகுதியை சேர்ந்தவர் நேசமணி (40). நேற்று முன்தினம் கோத்தகிரி நகர பகுதிக்கு வந்து மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் கோத்தகிரியில் இருந்து திருப்பூர் செல்லும் பஸ்சில் ஏறினார்.

தனது கிராமமான தவிட்டுமேடு பகுதிக்கு பயணச்சீட்டு வாங்கினார். ஆனால் அவர் உரிய பஸ் நிறுத்தத்தில் இறங்கவில்லை. மாறாக அரவேனு பகுதியில் பஸ் சென்று கொண்டிருக்கும்போது ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்து பஸ்சில் பின் சக்கரத்தில் சிக்கினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் நேசமணியின் இடது கால் மீது அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் நேசமணிக்கு இடது காலில் எலும்பு முறிவு, உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேசமணி அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கோத்தகிரி அருகே பரபரப்பு ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பயணி கால் நசுங்கியது: சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: