செஞ்சி, மார்ச் 29: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி மற்றும் வேப்பூர் வார சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், செஞ்சியில் ஆடு சந்தை நேற்று களை கட்டியது. அதிகாலை 3 மணி முதல் விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக வாகனங்களில் வந்திருந்தனர். சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
வெள்ளாடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமார் ரூ.3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஆடுகள் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால், வெளிச்சம் இல்லாத காரணத்தால், ஆடுகள் திருடு போவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால் அதிகாலை 6 மணி முதல் ஆடு விற்பனையை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர்: இதே போல் கடலூர் மாவட்டம் வேப்பூரில் நேற்று ஆடு சந்தை களைகட்டியது. வேப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேப்பாக்கம், குளவாய், காட்டுமயிலூர், சிறுபாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பங்குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை,விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கத்தை விட ஆடுகள் ரூ.2000 கூடுதலாக விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் வற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனர்.
The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி, வேப்பூர் வார சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.