ஓசூர்: ஓசூரில் ஆவணமின்றி இயக்கப்பட்ட 13 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் இருந்து ஓசூர் வழியாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பல நூறு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் சில வரி செலுத்தாமலும், காப்பீடு செய்யப்படாமலும், ஆவணங்களின்றியும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் போக்குவரத்து துறை இணை ஆணையர்(செயலாக்கம்) சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல், நேற்று காலை 8 மணி வரை 12 மணி நேரம் சிறப்பு தணிக்கை நடத்தினர்.
இதில் தமிழகத்தில் வரி செலுத்தாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் இயக்கப்பட்ட 13 ஆம்னி பஸ்கள் கண்டறியப்பட்டு, வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, தற்காலிகமாக சிறை பிடிக்கப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றியும், வரி செலுத்தாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என இணை போக்குவரத்து ஆணையர் தெரிவித்தார்.
The post ஓசூரில் 13 ஆம்னி பஸ்கள் பறிமுதல் appeared first on Dinakaran.